முதல் காலக் கட்டம் (1900 - 1925)
தமிழில் மேலைநாட்டு மரபை ஒட்டிய
நவீனச் சிறுகதை முயற்சிகள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலக் கட்டத்தில்
மேற்கொள்ளப்பட்டன.
தமிழில் மகாகவி சுப்பிரமணிய
பாரதியாரே சிறுகதை படைப்பதற்கான முதல் சோதனை முயற்சியில் ஈடுபட்டவர்.
இவருடைய நவதந்திரக் கதைகள்,
வேணுமுதலி சரித்திரம், மன்மத ராணி, பூலோக ரம்பை, ஆவணி அவிட்டம், ஸ்வர்ண
குமாரி, ஆறில் ஒரு பங்கு, காந்தாமணி, ரயில்வே ஸ்தானம் போன்ற கதைகள்
சிறுகதைக்குரிய இலக்கணங்களை பெரும்பாலும் பெறாவிட்டாலும் ஆரம்பகால முயற்சிகளாகும்.
வ.வே.சு.
ஐயர் 1912ஆம் ஆண்டு மங்கையர்க்கரசியின்
காதல் முதலிய கதைகள் என்ற ஐந்து கதைகள் அடங்கிய தொகுதியை வெளியிட்டார்.
ஐந்து கதைகளில் குளத்தங்கரை அரசமரம் என்ற கதையே தமிழின் முதல்
சிறுகதையாகும்.
ஆங்கிலத்திலும் தமிழிலும் நாவல்
படைத்து வந்த அ.மாதவையா குசிகர் குட்டிக் கதைகள் என்ற பெயரில் தமது
சிறுகதைகளை இரு தொகுதிகளாக வெளியிட்டார். சமூகச் சீர்திருத்த நோக்குடன்
இக்கதைகளைப் படைத்ததாக மாதவையா அந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
பாரதியார், வ.வே.சு. அய்யர், மாதவையா
போன்றோர் தமிழில் சிறுகதை முன்னோடிகளாகப் போற்றப்படுகிறார்கள்.
இரண்டாம் காலக் கட்டம் (1926 -
1945)
இக்காலக்
கட்டம் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் சிறப்பான காலக் கட்டம் எனலாம். புதுமைப்பித்தன்,கு.ப.ரா.,
ந.பிச்சமூர்த்தி, பி.எஸ்.ராமையா, மௌனி போன்றவர்களும், கல்கி, ராஜாஜி,
கே.எஸ்.வேங்கட ரமணி, சிட்டி, சங்கரராம், லா.ச.ரா. போன்றவர்களும் இக்காலக்
கட்டத்தில் சிறுகதை எழுதியுள்ளனர்.
கல்கி அதிர்ஷ்ட சக்கரம், கவர்னர் விஜயம், காங்கிரஸ்
ஸ்பெஷல், கோர சம்பவம், சாரதையின் தந்திரம், டெலிவிஷன், திருவழுந்தூர்
சிவக்கொழுந்து என்று பல சிறுகதைகளை எழுதியுள்ளார். கதர் இயக்கம், தீண்டாமை
அகற்றுதல், உப்புச் சத்தியாகிரகம், புலால் உணவு தவிர்த்தல், விதவா விவாகம்,
பாலிய விவாகக் கொடுமை என்று விடுதலை உணர்வுடைய கதைகளையும், சமூக உணர்வுடைய
கதைகளையும் எழுதியுள்ளார். இவருடைய எழுத்தில் நகைச்சுவை முக்கியப் பங்கு
வகிக்கிறது.
தமிழ்ச் சிறுகதை முயற்சியை உலகத் தரத்திற்கு
எடுத்துச் செல்ல முயன்றவர்களுள் புதுமைப்பித்தன் முதன்மையானவர் ஆவார். சிறுகதைக்கு
முக்கியத்துவம் தரும் மணிக்கொடி என்ற இலக்கியப் பத்திரிக்கையுடன்
தொடர்பு கொண்டு மிகச்சிறந்த படைப்பு முயற்சியில் ஈடுபட்டார். மேல்நாட்டுச்
சிறுகதை ஆசிரியர்களின் படைப்பாக்கத்தை நன்கு அறிந்த அவர், அவற்றை உள்வாங்கிக்
கொண்டு, தமது சொந்தப் படைப்பாளுமையைக் கொண்டு அற்புதமான சிறுகதைகளைப்
படைத்துள்ளார். புதுமைப்பித்தன் கேலிக்கதைகள், புராணக் கதைகள், தத்துவக்
கதைகள், நடப்பியல் கதைகள் என்று பலவகையான கதைகளைப் படைத்துள்ளார். வறுமையைப்
பற்றிப் பொய்க் குதிரை, ஒருநாள் கழிந்தது, பொன்னகரம், துன்பக்கேணி போன்ற
கதைகளையும், புராணக் கதை மரபை வைத்துச் சாபவிமோசனம், அகல்யை அன்றிரவு
போன்ற கதைகளையும், தத்துவ நோக்கோடு கயிற்றரவு, மகாமசானம், ஞானக் குகை போன்ற
கதைகளையும், வேடிக்கை வினோதக் கதையாகக் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்ற
கதையையும், நாட்டுப்புறக் கதைப் பாங்கோடு சங்குத்தேவனின் தர்மம், வேதாளம்
சொன்ன கதை போன்ற கதைகளையும் எழுதியுள்ளார்.
ந.பிச்சமூர்த்தியின் கதைகளிலும்
சிறுகதையின் வடிவமும் உத்தியும் சிறப்பாக அமைந்துள்ளன. மனித மன ஆழத்தை அவர்
தம் கதைகளில் சிறப்பாக வடித்துள்ளார். பதினெட்டாம் பெருக்கு, தாய்,
வானம்பாடி, மண்ணாசை, விழிப்பு, பஞ்சகல்யாணி போன்ற பல இலக்கியத் தரமான
கதைகளைப் படைத்துள்ளார்.
கு.ப.ராஜகோபாலன் இக்காலக் கட்டத்தைச் சேர்ந்த மற்றொரு
சிறந்த எழுத்தாளர் ஆவார். இவர் ஆண் பெண் உறவை மையமாகக் கொண்டு பல கதைகளை
எழுதியுள்ளார். திரை, சிறிது
வெளிச்சம், மூன்று உள்ளங்கள், ஆற்றாமை, விடியுமா, நூருன்னிசா, தாயாரின்
திருப்தி போன்ற இவருடைய கதைகளும் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கனவாகும்.
மௌனி, இக்காலக் கட்டத்தைச்
சேர்ந்த மற்றொரு சிறந்த படைப்பாளி ஆவார்.
இவருடைய சிறுகதைகள் அனைத்தும் அழியாச் சுடர், மௌனியின்
கதைகள் என்ற பெயர்களில் இரு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
இந்தக் காலக்கட்டத்தில் எழுதிய
மற்றொரு எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம்.
தரங்கிணி, காயத்திரி, இதழ்கள், புலி ஆடு, ஜ்வாலை என்பன இவருடைய
சிறுகதைகளில் சிலவாகும்.
இக்காலக் கட்டத்தில் எழுதிய
குறிப்பிடத்தகுந்த பிற சிறுகதை எழுத்தாளர்கள் பி.எஸ். ராமையா, கி.ரா. என்ற
கி.ராமச்சந்திரன், சிதம்பர சுப்பிரமணியன், டி.எஸ். சொக்கலிங்கம், சங்கு
சுப்பிரமணியன் போன்றவர்கள் ஆவர்.
மூன்றாம் காலக் கட்டம் (1946 -
1970)
தமிழ்ச் சிறுகதை வரலாற்றில்,
மூன்றாவது பகுதியான இக்காலக் கட்டத்தில், மிகப் பலர் சிறுகதை எழுதுவதை
மேற்கொண்டார்கள். கரிச்சான் குஞ்சு, தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராம்,
ரா. பாலகிருஷ்ணன், விந்தன், கு.அழகிரிசாமி, மு.சிதம்பர ரகுநாதன், அகிலன்
திராவிட இயக்க எழுத்தாளர்களான அண்ணா, மு.கருணாநிதி ஆகியவர்களும், மு.வ.
என்னும் மு.வரதராசனார், ஜெயகாந்தன் ஆகியவர்களும் சிறுகதைகள்
படைத்துள்ளனர். இவர்களில் சிலர் சிறுகதை இலக்கியத்திலும், சிலர் நாவல்
இலக்கியத்திலும், சிலர் இவ்விரண்டு இலக்கிய வகைகளிலும் தடம் பதித்துள்ளனர்.
தி.ஜானகிராமனின் மறதிக்கு,
செய்தி, முள்முடி, சிலிர்ப்பு போன்ற சிறுகதைகள் பெரும் சிறப்புத்தன்மை
வாய்ந்தவை.
அகிலன் பதினேழு சிறுகதைத் தொகுதிகளை எழுதி
வெளியிட்டுள்ளார். இவரின் முதல் சிறுகதை காசு மரம் என்பதாகும். மேலும்,
சகோதரர் அன்றோ, கங்காஸ்நானம், சிசுவின் குரல், ஏழைப் பிள்ளையார், பெரிய
மீன், ஆண்-பெண், குழந்தை சிரித்தது, சத்திய ஆவேசம், நெல்லூர் அரிசி, பசியும்
ருசியும், விடுதலை என்பன இவர் எழுதிய சிறுகதைகளுள் சிலவாகும்.
திராவிட இயக்கச் செல்வாக்குடன்
பகுத்தறிவுப் பாதையில் கதை படைத்தவர்களுள் அண்ணா, மு.கருணாநிதி ஆகியோர்
இன்றியமையாதவர்கள்.
அண்ணாவின் தஞ்சை வீழ்ச்சி,
சொர்க்கத்தில் நரகம், திருமலை கண்ட திவ்விய ஜோதி, புலி நகம், பிடி சாம்பல் போன்ற
பல கதைகளில் மத நம்பிக்கையைக் கண்டித்துள்ளார். செவ்வாழை இவருடைய மிகச்
சிறந்த கதையாகும். ஏழ்மையின் கொடுமையை இக்கதையில் மிகச் சிறப்பாக
எடுத்துக்காட்டியுள்ளார்.
வடிவ உத்தியுடன் பகுத்தறிவுப்
பாதையில் கதை எழுதியவர் மு.கருணாநிதி. குப்பைத்தொட்டி, கண்டதும் காதல்
ஒழிக, நளாயினி, பிரேத விசாரணை, தொத்துக் கிளி, வாழ முடியாதவர்கள் போன்ற
இவருடைய சிறுதைகள் குறிப்பிடத்தக்கன.
மு.வ வின் விடுதலையா, குறட்டை ஒலி
பழியும் பாவமும்,
இக்காலக் கட்டத்தில் எழுதிய
ஜெயகாந்தன் சிறந்த சிறுகதை ஆசிரியர். இவருடைய ஒரு
பிடி சோறு,இனிப்பும் கரிப்பும்
, தேவன் வருவாரா
,மாலை மயக்கம்
,யுகசந்தி (அக்டோபர்,உண்மை சுடும்
ஆகியவை சிறப்புத்தன்மை வாய்ந்த
கதைகளாகும்.
நான்காம் காலக் கட்டம் (1976 முதல் இன்று வரை)
எழுபதுகளில் சா.கந்தசாமி,
இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, அசோகமித்திரன், நீல பத்மநாபன்,
வண்ணநிலவன், வண்ணதாசன், சுஜாதா, நவபாரதி, சுப்பிரமணிய ராஜு, பாலகுமாரன் போன்றவர்களும்
பா.செயப்பிரகாசம், பிரபஞ்சன், கிருஷ்ணன் நம்பி, ஜெயமோகன், ஜி.நாகராஜன்
போன்றவர்களும் சிறுகதைப் படைப்புகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாகத் தடம்
பதித்துள்ளனர். இந்தக் காலக் கட்டத்தில், நவீனத் தமிழ்ச் சிறுகதை இலக்கியம்,
கருத்திலும் சொல்லும் நேர்த்தியிலும் மொழியைக் கையாளும் முறையிலும் பல
மாறுதல்களைக் கண்டுள்ளது. இச்சிறுகதைகள் தமிழ் மக்களின் வாழ்க்கையைப் பல்வேறு
கோணங்களில் பிரதிபலித்துக் காட்டுகின்றன. சிறுகதைப் படைப்பே விமர்சன ரீதியாக
எழுதப்பட்டது. அதனால் தேவையற்ற சொல் அலங்காரம், தேவையில்லாத வர்ணனைகள்
என்பனவெல்லாம் தவிர்க்கப்பட்டு, படைப்பு அதன் முழு வீச்சோடு வெளிப்பட்டுள்ளது
எனலாம். இருபத்தோராம் நூற்றாண்டு தொடர்பு யுகம், கணினி யுகம் என்றெல்லாம்
சுட்டப்படுகிறது. இந்நூற்றாண்டில், இணைய இதழ்கள் என்ற புதுவகை இதழ்கள் தோற்றம்
பெற்றன. அவற்றில் உலகத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் ஒருங்கே இடம்
பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்திலிருந்து
புலம்பெயர்ந்த காஞ்சனா தாமோதரன், கீதா பென்னட், இலங்கையிலிருந்து
புலம்பெயர்ந்த இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன் போன்றவர்கள் தொடர்ந்து
இவ்விதழ்களில் எழுதி வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து உலகத் தமிழ்
எழுத்தாளர்கள் பலர் சங்கமிக்க இணைய இதழ்கள் வழி அமைத்தால் அது தமிழ்ச் சிறுகதை
வளர்ச்சியை மற்றோர் உயரத்திற்கு உறுதியாக இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக